Showing posts with label Tamil Recipes. Show all posts
Showing posts with label Tamil Recipes. Show all posts

காரட் சாலட்

தேவையான பொருட்கள்  காரட் - 4 (தோல் சீவி துருவி வைக்கவும்)
பாசிப்பருப்பு - 1 / 4 கப் (1 /2 மணி நேரம்  ஊற வைக்கவும்)
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2 (கீறிக் கொள்ளவும்) 
கொத்துமல்லி தழை - 1 /4 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சம் பழம் - 1  (சாறு எடுத்து வைக்கவும்)
எண்ணை - 1 தே க 
கடுகு சிறிதளவு
உடைத்த உளுத்தம் பருப்பு - சிறிதளவு 
பெருங்காய் தூள் - சிறிதளவு 

செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில், துருவிய காரட், ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு, கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும். 


தாளிக்கும் கரண்டியில் எண்ணையை சூடு பண்ணவும், சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து காரட்டின் மீது தாளிக்கவும்.

சுவையான சாதனா காரட் சாலட் தயார். இதை தனியாகவும் சாப்பிடலாம், தயிர் சேர்த்தும் சாப்பிடலாம். டியட்ல் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு. 

வெஞ்சனம்

இங்க குடுக்கற அளவு எல்லாமே ரெண்டு பேருக்கானது.

தேவையானது:
புளி ஒரு எலுமிச்சம் பழம் அளவு.
மிளகாய் வற்றல் - (காரத்திற்கேற்ப 10 to 12 வரை)
தனியா 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
ஜீரகம் - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
தேங்காய் 1 நன்கு துருவி கொள்ளவும்
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 nos.
கத்திரிக்காய் - 1/4 to 1/2 கிலோ (வாழைகாய், கொத்தவரை, அவரை போன்ற காய்களும் போடலாம் அனால் கத்திரிக்காய் போட்டால் சுவையே அலாதி தான்)

செய்முறை:
தனியா, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், ஜீரகம், எல்லாவற்றையும் தனி தனியாக நல்லெண்ணையில் வறுககவும். பெரிய வெங்காயத்தையும் நறுக்கி, வறுத்து வாய்த்த சாமான்களுடனும் துருவிய தேங்கையுடனும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். நைசாக அரைக்க கூடாது, நற நற என்று அரைத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை நன்கு குழைய வேக விடவும். சின்ன வெங்காயத்தை நல்லெண்ணையில் வதக்கி கொள்ளவும். புளியை கரைத்து அது கொதிக்கும் போது, வதக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கின கத்திரிக்கையை போட்டு புளி தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து வேக விடவும். புளியின் பச்சை வாசானை போன உடன் அரைத்த விழுது, நன்கு கரைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து நுரைத்து வந்த உடன், இறக்கி, கறிவேப்பிலை போட்டு, அதன் தலையில் தாளித்து கொட்டவும்.

அவரைப் பருப்பு என்று ஒரு பருப்பு உண்டு. இந்த அவரைப்  பருப்பை போட்டு வெஞ்சனம் வைத்தால், இன்னும் மிகவும் சுவையாக இருக்கும். தட்டைப் பருப்பும் சேர்க்கலாம்.

வெங்காயம், கத்திரிகாயை கண்டிப்பாக சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி போடவும். சின்ன வெங்காயம் போட்டால் கூடுதல் சுவை.

மிளகு ஜீரகம் மற்றும் அவரை பருப்பு போடுவதால் வெஞ்சனம் என்று பெயர். குடியானவர்களின் உணவு இது. கெட்டியாக செய்து களியுடன் உண்பார்களாம்.

அரிசி தேங்காய் பால் கஞ்சி

தேவையானவை
பச்சரிசி - 1  டம்ளர் 
வெந்தயம் - 1  ஸ்பூன் 
பூண்டு - 4  பல்
தேங்காய் பால் - 1  கப்
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:
அரிசியை நொய்யாக உடைத்து 1  டம்பளர்க்கு 3  டம்பளர் தண்ணீர், வெந்தயம், பூண்டு, உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். நன்றாக 3 விசில் வர வேண்டும். குக்கரை திறந்த பின் வெந்த அரிசியுடன் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சுவையான சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார். 

காலை சிற்றுண்டிக்கு ஏற்ற சந்தன உணவு. உடல் நிலை சரி இல்லாதவர்கள் தேங்காய் பாலை சேர்க்காமல் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. கர்பிணி பெண்களும், குழந்தை பெற்ற தாய் மார்களுக்கும் எளிதாக ஜீரணிக்க கூடிய உணவு. பசியின்மையை போக்கி விடும். 

அஞ்சறை பெட்டி

ஒவ்வொரு சமையல் அறையிலும் முக்கியமாக இடம் பெரும் ஒரு பாத்திரம் அஞ்சறை பெட்டி. வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும் இதன் பெயர் தான் அஞ்சறை பெட்டி அனால் இதில் 6 அல்லது 7 சிறிய கிண்ணங்கள் இருக்கும். அந்த கிண்ணங்களின் அளவிற்கு அழகாக, அளவாக ஒரு சின்ன ஸ்பூன் உண்டு. 

இதில் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, ஜீரகம், கட்டி பெருங்காயம், மஞ்சள் பொடி, தனியா, போன்றவற்றை போட்டு வைக்கலாம். இதற்கு ஒரு மேல் மூடி உண்டு அதில் மிளகாய் வற்றல் வைத்து கொள்ளலாம்.

உடனடி மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் 
மாங்காய் - 1 
பச்சை மிளகாய் - 2 
பெருங்காய பொடி - 1 /2  tsp
உப்பு  - தேவையான அளவு

செய்முறை 
மாங்காயை தோலி சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். உப்பு, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காய பொடி அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். மாங்காயில் இந்த அரைத்த விழதை கலந்து ஒரு பத்து நிமிடங்கள் ஊற விட்டு உடனடியாக பரிமாறவும். 

சீரான உடம்பிற்கு தேவையான சீரக பொடி செய்வது எப்படி?

சீர் + அகம் (உடல்) = சீரகம் என்று சொல்வார்கள். வெளி உடம்பை அழகாக்க பலவித பௌடர்களை போடும் நாம் 
உள் உடம்பை பாதுகாக்க இந்த பொடியை கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை செய்வது மிகவும் எளிது.
எவ்வளவு பொடி தேவையோ அந்த அளவு அல்லது குறைந்தது ஒரு 100 கிராமாவது சீரகத்தை வாங்கி வெய்யிலில் காய 
வைத்து எண்ணை விடாமல் வாசனை வரும் வரை வறுத்து ஆறியவுடன்  மிக்சியில் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு 
வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

சப்பாத்திக்கு செய்யும் எல்லா சைடு டிஷ்களிலும் சீரக பொடி சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கூடும்.
லஸ்ஸி, நீர் மோர் வகைகளுக்கும் ஏற்றது.  சாட் வகைகளில் சேர்க்கப்படும் ஸ்வீட் சட்னிகளில் நிச்சயம் இதை சேர்க்க வேண்டும். 
அப்போதுதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாகிவிடும். 

வெருசெனேக பொடி (வேர்கடலை கொப்பரை பொடி)

ஆந்திராவிலிருந்து நம்மூருக்கு வந்திருக்கும் அருமையான பொடி இது.  
இதற்கு தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - ௨ கப்
ஜீரகம் - ௨ டீஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 8 
கொப்பரை - அரை மூடி (உலர்ந்த தேங்காய்)
பூண்டு   பல்     -  15 
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கருவேப்பிலை  -  சிறிதளவு 
உப்பு            - தேவைக்கேற்ப 

செய்முறை :

முதலில் வேர்க்கடலையை எண்ணையில்லாமல் வறுக்கவும். சிறிது ஆறியவுடன் கைகளின் நடுவில் வைத்து தேய்த்தால்
 வேர்க்கடலையின் மேல் தோல் தனியாக வரும், அதை நீக்கி விடவேண்டும். பின்னர் அதே வாணலியில் எண்ணை விட்டு
 மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.   பின்னர் மிக்சியில் 
வேர்க்கடலையோடு சேர்த்துப் பொடித்து ஒரு ப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.  

சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. 

கொள்ளு பருப்பு பொடி செய்வது எப்படி?

கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்று சொல்வார்கள். உடல் இளைப்பதற்கு கொள்ளு உண்பது மிகவும் நல்லது. 
எந்த வித பக்க விளைவும் இல்லாமல் உடம்பை இளைக்க வைப்பது கொள்ளு ஒன்று தான்.  
சரி கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்: 
கொள்ளு - 1 கப்
மிளகாய் வற்றல் - 5  - 10 ((கொள்ளு அளவிற்கேற்றவாறு)
பெருங்காயம்     -  ஒரு சிறு துண்டு (கட்டியாக இருந்தால்) 
உப்பு - தேவைக்கேற்ப 
உப்பை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக வாணலியில் எண்ணை விடாமல் வறுத்துக்கொள்ளவும். 
பின்னர் நன்கு ஆறியவுடன் உப்பையும் சேர்த்து வைத்து மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகிக்கலாம். 

நல்ல சூடான சதத்தில் நெய்யோ நல்லெண்ணையோ விட்டு இந்த பொடியை தேவையான அளவு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
உடம்பில் தேவையற்ற கொழுப்பு குறைந்து அழகும் கூடும். 

கொள்ளை மணம் தரும் தனியா பொடி செய்வது எப்படி?

எந்த ஒரு சைடு டிஷ் ஆக இருந்தாலும் அதில் தனியா பொடி இருந்தால் அதன் சுவையே தனி தான். இதை செய்வது ரொம்ப ஈசி. 

நல்ல உருண்டையான ஓட்டை இல்லாத தனியாவை வாங்கி ஒரு இரண்டு நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும். பின்னர்
இதை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்று முறை சலித்து கப்பியை திரும்பத் திரும்ப மிக்சியில்
போட்டு அரைத்தால் நன்றாக பொடியாகிவிடும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் சப்பாத்திக்கு எந்த
சைடு டிஷ் செய்தாலும் உபயோகப்படும். 

பட்டையைக் கிளப்பும் பிரியாணி செய்யத் தேவையான பட்டை பொடி செய்வது எப்படி?

பட்டை எல்லா கடைகளிலும் கிடைக்கும். ஆனால் இதன் மணமும் வீரியமும்  நாள் ஆக ஆக குறைந்து கொண்டே வரும். அதனால் இதை வாங்கியவுடனே பொடி செய்து வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

செய்முறை: 

பட்டையை சிறு சிறு துண்டுகளாக ஒடித்து வெறும் வாணலியில் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம். 

இதை  சூப். மேரினேட்.  பிரியாணி. குருமா, கேக் மற்றும் காய்கறி ஸ்டூ தயாரிக்கும் போது கலந்தால் சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். 

வெரி குட் சாம்பார் செய்ய தேவையான வெந்தயப்பொடி செய்வது எப்படி?

சாம்பார் சுவைப்பதற்கு சாம்பார் பொடியில் கலந்திருக்கும் வெந்தயப்பொடி ஒரு முக்கிய காரணம்.  இதை தனியாக வைத்தும் உபயோகிக்கலாம்.  திடீர் சாம்பாருக்கு இது மிக அவசியம். இதை செய்வது மிகவும் சுலபம். 

ஒரு அரை கப் வெந்தயத்தை வாணலியில் போட்டு பிரவுன் கலராக மாறும் வரை வறுக்க வேண்டும்.  எண்ணெய் விட தேவையில்லை.  அதே போல் ரொம்ப கருப்பாக ஆகும் வரையும் வறுக்கத் தேவையில்லை. லைட் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் நன்கு ஆரியவுடன் மிக்சியில் மையாக அரைத்து ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கவும். 

தினமும் சாம்பார் செய்து முடித்து மூடி வைக்கும் முன்னர் அரை ஸ்பூன் வெந்தய பௌடரை சாம்பார் மேல் போட்டு ஒரு கலக்கு கலக்கி மூடி வைத்தால் சாம்பார் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் பசியையும்  தூண்டும். 

இட்லி மிளகாய் பொடி ஈஸியா செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு இட்லி தோசையுடன் பெரியவர்களைப்போல் மிளகாய் பொடி போட்டு சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.  அதனால் பல வீட்டில் சட்னி சாம்பாரோடு மிளகாய் பொடியும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

உளுத்தம் பருப்பு : ஒரு கப்
கடலை பருப்பு     : ஒரு கப்
மிளகாய் வற்றல்: 20  - 40  (தேவையான அளவு)
பெருங்காயம்      : ஒரு சின்ன ஸ்பூன் பொடியாக இருந்தால் (அல்லது)
கட்டி பெருங்காயம் : ஒரு சின்ன துண்டு
உப்பு : அவரவர் தேவைக்கேற்ப 

செய்முறை: 

எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக ஒரு ஸ்பூன் எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.  கட்டி பெருங்கயமாக இருந்தால் மட்டும் வறுக்கலாம் பொடியாக இருந்தால் அப்படியே போடலாம்.  

சிறிது ஆறியவுடன் முதலில் மிளகாயையும் பின் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் கர கரப்பாக அரைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகப்படுத்தலாம். 

நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைக்கவும். 

இஞ்சி பூண்டு விழுது செய்வது எப்படி

இஞ்சியும் பூண்டும் இல்லாத சைடு டிஷ்ஷே இல்லை என்று ஆகிவிட்டது இப்போது. இதற்காக ஒவ்வொரு முறையும் கடைக்கு ஓடவும் முடியாது. 
என்ன செய்வது எப்படி செய்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்: 
தோல் உரித்த பூண்டு - 100  கிராம் 
சுத்தம் செய்த இஞ்சி  - 100  கிராம் 
உப்பு - ஒரு டீஸ்பூன் 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 
செய்முறை: 
நல்ல கனமான சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அடுப்பில் வைக்கவும். இதில் இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்து விடவும். இஞ்சியும் பூண்டும் நன்கு ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதை ஒரு
காற்றுப்புகாத டப்பாவிற்கு மாற்றி பிரிட்ஜில் வைத்து தேவையான பொழுது எடுத்து உபயோகிக்கலாம். 

ஐஸ் கிரீம் போல திக்கான புளிக்காத தயிர் தயாரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கெட்டித்  தயிரை இனிமேல் கடையில் போய் வாங்க வேண்டாம். ரொம்ப ஈசியா வீட்டிலேயே செய்யலாம் - எப்படி என்று பார்ப்போமா?


தேவையான பொருட்கள்: 
பால்   - ஒரு லிட்டர் 
தயிர்  - ஒரு டீஸ்பூன் 

செய்முறை :
முதலில் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்ச வேண்டும். நன்கு காய்ந்தவுடன் பாலின் மேற்ப்பகுதியில் பாலாடை திரண்டு வரும். அந்த சமயத்தில் அடுப்பை குறைத்து மேலும் சிறிது நேரம் சுட வைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆற விட வேண்டும்.  ஓரளவிற்கு ஆறி அறையின் வெப்ப நிலைக்கு வந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் ஒரு டீஸ்பூன் தயிரை அதன் மேல் விட்டு ஸ்பூனால் சிறிது கிளறி விட்டு ஒரு தட்டை போட்டு மூடி வெளியில் வைத்து விட வேண்டும். பிரிட்ஜில் வைக்க கூடாது. 

நாம் இருக்கும் ஊரின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு 5 லிருந்து 6 மணி நேரமோ அதற்கு மேலோ இப்படி வைக்க வேண்டும். பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

இப்படி  சிறிய கிண்ணங்களில் நிரப்பி தயாரிக்கும் தயிரை அப்படியே கப்புகளில் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 

பனீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
பால்          -    ஒரு லிட்டர் 
தண்ணீர்  -     அரை கப் 
எலுமிச்சம் பழ சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
முதலில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும்.  இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழ சாற்றை கலந்து வைக்க வேண்டும்.  பால் நன்கு பொங்கி வரும் போது எலுமிச்சம் பழ சாற்றை அதன் மேல் விட்டு அடுப்பை சிறிதாக்கி மேலும் கொதிக்க விட வேண்டும். பால் திரி திரியாக தயிர் போல வரும்.  தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்  பின் நன்றாக கெட்டியாக ஆன வுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விட வேண்டும். கட்டியும் தண்ணீருமாக இருக்கும் இதை ஒரு மஸ்லின் துணியில் விட்டு மூட்டை போல கட்டி தண்ணீரில் அலம்பி பின் அதை ஒரு ஆணியில் தொங்க விட வேண்டும்.  இப்படி செய்வதால் அதில் இருக்கும் தண்ணீர் சுத்தமாக வடிந்து கட்டியாக இருக்கும்.  இப்படி வடியும் தண்ணீரில் நிறைய புரோட்டின்கள் இருப்பதால் அந்த தண்ணீரை சப்படி மாவு பிசைவதற்கோ சைடு டிஷ் பண்ணும்போது தண்ணீருக்கு பதிலாகவோ சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் முழுவதுமாக வடிந்தவுடன் அந்த மூட்டையை ஒரு தட்டில் பரத்தி அந்த மஸ்லின் துணியின் மீது ஒரு நல்ல கனமான பொருளை வைத்து ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு அதை எடுத்து சிறு சிறு துண்டங்களாக வெட்டி ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து விட்டால் போதும்.  ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.  

இதை வைத்து பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர் மற்றும் ஆலு மட்டர் போன்ற பல சைடு டிஷ்கள் தினம் ஒன்றாக செய்து அசத்தலாம். 

புளி பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

தற்போது எல்லாப் பெரிய கடைகளிலும் புளி பேஸ்ட் கிடைக்கிறது. ஹோம் மேட் அல்லது மல்லிகா ஹோம் ப்ராடக்ட்ஸ் என்று கேட்டால் கிடைக்கும். என்னதான் பெரிய கடையிலிருந்து வாங்கினாலும் நம்முடைய கை மணத்தையும் புளியோடு சேர்த்துக் கரைத்தால் அது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்குமே அதனால் அந்த புளி பேஸ்ட் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்ப்போமா?

இந்த ஒரு பேஸ்ட் ஐ வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு சாம்பார், இன்னொரு நாள் வைத்த குழம்பு அடுத்த நாள் கார குழம்பு மற்றும் ரசம் புளிக்குழம்பு என்று டெய்லி பண்ணி அசத்தலாம். இப்போ இதற்கு என்னென்ன தேவை என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

புளி (கொட்டை நீக்கியது) - கால் கிலோ 
நல்ல தண்ணீர்                    - அரை லிட்டர்  அவ்வளவுதான் 

இதை செய்வது மிகவும் எளிது.  முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து புளியை அதில் ஊற வைக்க வேண்டும்.  தண்ணீர் சூடு ஆறியவுடன் மிக்சியில் நன்றாக அரைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் வழித்து பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்த வேண்டும். 

சாப்பிட தூண்டும் ஸாப்ட் சப்பாத்தி செய்வது எப்படி?

சப்பாத்தி மாவு பிசைய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 4 கப் 
உப்பு          -   தேவைக்கேற்ப 
நெய்          -   வசதிக்கேற்ப (குறைந்தது 2 மேஜைக்கரண்டி)
தண்ணீர்    -   3  கப் 

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் முதலில் மாவோடு உப்பை நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு நெய்யை சேர்த்து பிசைய ஆரம்பிக்கவும்.  இடையிடையில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாத்திரத்தின் நடுவிலிருந்து 
அதன் விளிம்பு வரை சுற்றி சுற்றி பிசைய வேண்டும். எல்லா மாவும் ஒன்றாக சேர்ந்து பந்து போல் உருண்டு வர வேண்டும்.
எலாஸ்டிக் போல் மாவு கையில் ஒட்டாமல் உருண்டு வந்ததும் மாவு தயார் என்று அர்த்தம். 

மாவை நன்றாக பிசைய வேண்டும் இல்லையென்றால் மற்றவர்கள் சாப்பிடும்போது கையை பிசைந்து கொண்டு நிற்க வேண்டி வரும். 

சரி மாவு சப்பாத்தியாக மாறுவது எப்போது?

மேலே சொல்லியபடி பிசைந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஈரத்துண்டால் மூடி வைத்து விட்டு சீரியல் பார்த்து விட்டு வரலாம்.
பின்பு மாவை எலுமிச்சம் பழ அளவு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி பலகையில் குழவியால் தேய்த்து தேவையான
அளவு பெரிய வட்டமாக இட்டுக்கொள்ள வேண்டும். 

இப்படி ஒரு இரண்டு மூன்று சப்பாத்தி ரெடி செய்தவுடன் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானவுடன்
சப்பாத்தியை கல்லின் மேல் போட வேண்டும். ஒரு சைடு வெந்தவுடன் திருப்பி போட வேண்டும்.  உடனேயே அந்த சப்பாத்தியை எடுத்து
எரியும் நெருப்பின் மேல் மெதுவாக வைக்க வேண்டும். பக்கத்து ஸ்டவ்வை ஏற்றி சிம்மில் வைத்துக்கொள்ளலாம்.  சப்பாத்தியை போட்ட
உடன் அடுப்பை பெரிதாக்கி கிடுக்கியால் திருப்பி திருப்பி நெருப்பில் வாட்டினால் சப்பாத்தி புஸ்சென்று உப்பி வரும். இப்போது அதை 
அடுப்பிலிருந்து எடுத்து விடலாம். இப்படி ஒவ்வொன்றாக செய்து ஒரு டப்பாவிலோ கேசரோலிலோ போட்டு வைத்தால் சூடாக இருக்கும்.              

மாவு மீந்து விட்டதே என்று கவலைப்பட வேண்டாம்.  ஒரு காற்றுப்புக முடியாத டப்பாவில் சிறிது எண்ணையை தடவி மிச்ச மாவை
பெரிய உருண்டையாக உருட்டி போட்டு வைத்து 2 நாள் வரை கூட உபயோகிக்கலாம். 

இதே வெப்சைட் இல் இருக்கும் சைடு டிஷ்களில் எதாவது ஒன்றோடு சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட்டியோடு ஹெல்த்தி சாப்பாடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். 

கடைக்கு போகாமல் வீட்டிலேயே இட்லி மாவு தயாரிப்பது எப்படி?

இட்லி தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் சிறந்தது.  இதை தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களில் இருந்து தவழ்ந்து வரும் குழந்தைகள் மற்றும் தள்ளாடும்  தாத்தா பாட்டிகள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.  இந்த ஒன்று மட்டும் தான் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய அற்புதமான உணவு.  நீராவியில் வேக வைப்பதால் டயட்டில் இருப்பவர்கள் கூட டஜன் கணக்கில் சாப்பிடலாம். அவ்வளவு பாதுகாப்பானது. 
சரி இதை எப்படி செய்வது என்று பார்ப்போமா?  

இட்லி என்று நினைத்தவுடன் செய்து சாப்பிட முடியாது.  நாளை இட்லி சாப்பிட வேண்டும் என்றால் முதல் நாளே இதற்கான மாவு தயாரிக்க வேண்டும்.

மாவு தயாரிக்கும் முறை பின் வருமாறு:

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி  - ( I.R 20 அல்லது பொன்னி அரிசி) - 4 கப் 
முழு உளுந்து    -  1 கப் 
வெந்தயம்          -  1 டீஸ்பூன் 
உப்பு                    -   சுவைக்கேற்ப 

செய்முறை: 

அரிசி உளுந்து இரண்டையும் தனித்தனியாக தண்ணீரில்  6 மணியிலிருந்து 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். வெந்தயத்தை உளுந்தோடு சேர்த்து ஊற வைக்கலாம்.  பின்பு நன்றாக களைந்து சுத்தம் செய்து உளுந்தை மையாகவும் அரிசியை சிறிது கரகரப்பாகவும் அரைத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் தனி தனியாக அரைத்துக்கொள்ளவும்.  உளுந்தை முதலில் தண்ணீர் கொஞ்சமாக விட்டும் நன்கு மசிந்தவுடன் தண்ணீர் அதிகமாக விட்டும் அரைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு உயரமான பெரிய பாத்திரத்தில் கல் உப்பு தேவையான அளவு சேர்த்து இரண்டு மாவையும் விட்டு கையால் நன்றாக கலந்து வைத்து விட வேண்டும்.  கையால் கலப்பதால் மாவு சீக்கிரம் பொங்கி வரும் அதனால்   இட்லி மெத்தென்று பஞ்சு போல வரும். 

இப்படி கலந்த மாவை வெய்யில் காலமாக இருந்தால் 3 -4 மணி நேரமும் குளிர் காலமாக இருந்தால் 8 - 12 மணி நேரமும் புளிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த மாவை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். மறு நாள் இட்லி செய்வதற்கு முன் மாவை அறையின் வெப்ப நிலைக்கு கொண்டு வந்த பின்பே இட்லி செய்ய வேண்டும். 

மாவு எப்படி இட்லியாக மாறும்? 

இட்லி தட்டுகளை நன்றாக அலம்பி துடைத்து அதன் மேல் சிறிது நல்லெண்ணையை தடவி பின்பு இட்லி மாவை ஊற்ற வேண்டும். இட்லி தட்டுக்களில் உள்ள குழி முக்கால் அளவு வரை மாவு விட்டால் போதும் அப்போதுதான் இட்லி புஸ்சென்று மேலே எழும்பி அழகாக வரும். இந்த தட்டுக்களை குக்கரில் வைத்து மூட வேண்டும். விசில் போட வேண்டிய அவசியமில்லை. 10 அல்லது 20  நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். பின் சிறிது சூடு ஆரியவுடன் இட்லியின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூனால் எடுத்தால் தட்டில் சிறிது கூட ஒட்டாமல் அழகாக எடுக்க வரும்.   அவ்வளவுதான் இட்லி தயார்.

இதை சுடச்சுட மிளகாய் பொடியுடனோ பல வித சட்னி வைககளுடனோ சம்பாரோடோ சாப்பிடலாம். 

மறக்கக்கூடாத சில குறிப்புகள்: 

1 . அரிசி உளுந்தை க்ரைண்டரில்தான் அரைக்க வேண்டும்.

2 . இட்லி தட்டை குக்கரில் வைப்பதற்கு முன் குக்கரில் இரண்டு டம்ளர்   
      தண்ணீர் விட வேண்டும்.

3 . அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.

Sambhar powder|Kuzhambu Podi recipe|குழம்பு பொடி

தனியா - இரண்டரை கப்
துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒவ்வொன்றும் அரை கப்
மிளகாய் வற்றல் - (குண்டு மிளகாய் வற்றல் - நான்கு கப், ஒல்லி மிளகாய் வற்றல் ஆறு அல்லது ஏழு கப்)
வெந்தயம் - கால் கப்
ஜீரகம் - கால் கப்
கட்டி பெருங்காயம் - சிறிதளவு

எல்லா பொருட்களையும் தனி தனியாக வறுத்து நல்ல நைசாக அரிது வைத்து கொள்ளவும். இந்த பொடியை கறி, வற்றல் குழம்பு, பருப்பு குழம்பு எல்லா வற்றிற்கும் உபயோகப் படுத்தலாம்

Recipe for Rasam Powder in Tamil|ரச பொடி

இந்த முறையிலான ரசபொடி, என்னுடைய அம்மா சொல்லி குடுத்து. அவர்கள் பல வருடமாக இந்த முறையில் பொடி செய்து தயாரிக்கும் ரசம், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

தனியா - மூன்று கப்
துவரம் பருப்பு - ஒன்னே முக்கால் கப்
மிளகாய் வற்றல் - ஒன்றரை கப்
மிளகு - ஒரு கப்
சீரகம் - முக்கால் கப்
பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
சிறிது மஞ்சள் பொடி

(மிளகாய் வற்றல் ஒல்லியாக இருந்தால் மூன்று கப் போட்டு கொள்ளலாம்)

மஞ்சள் பொடியை தவிர மாற்ற அனைத்தையும் தனி தனியாக கருகாமல் பச்சை வாசனை போக வருது எடுத்து ஒன்றாக மிக்சியில் நைசாக அரைக்கவும்.